Tuesday, April 19, 2011

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்


சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment