Sunday, April 24, 2011

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி



முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

நீர்வை. தி.மயூரகிரி சர்மா

சீர்மிக்க நம் செம்மொழியாகிய செந்தமிழில் எழுந்துள்ள நூல்களுள் பொய்யடிமையில்லாத நல்லிசைப் புலவர் நக்கீரனார் பாடியருளிய திருமுருகாற்றுப்படை சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இது சிறந்த ஒரு சமய நூலாகவும் பாராயண நூலாகவும் விளங்குகின்ற அதே வேளையில் ஈடிணையற்ற இலக்கிய நூலாகவும் மிளிர்கின்றது. சங்ககாலத்து நூல்களுள் இன்று நமக்குக் கிடைப்பவை பத்துப் பாட்டு நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு , மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவும் எட்டுத்தொகை நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்ற எட்டுநூல்களும் இறையனார் அகப்பொருள் மற்றும் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல்களுமே என்பது பல்வேறு பேரறிஞர்களும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும்.



இந்தச் சங்கநூல்கள் தனிச்சிறப்பும் செம்மை மிக்க தமிழ் நடையும் கொண்டமைந்து விளங்கக் காணலாம். இச் சங்கநூல்களுக்கெல்லாம் கடவுள் வாழ்த்துப் போல அமைந்திருக்கக் கூடிய சிறப்பும் திருமுறைகளிலே பதினோராம் திருமுறையின் பகுதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பெருமையும் கொண்ட அற்புதத் திருநூல் திருமுருகாற்றுப்படை.

சங்ககாலத்தில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் எழுந்துள்ளன. அவையாவன. திருமுருகாற்றுப்படை, பொருபாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பனவாம். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளுடையது. கூத்தரும், பாணரும், அவர்கள் முதலியவர்களும், தாம் ஒரு வள்ளலிடம் சென்று, பெருஞ்செல்வத்தைப் பெற்று, மீண்டு வரும் வழியில் எதிர்படும் இரவலரிடம் மறைக்காமல் தாம் பெற்ற செல்வத்தைக் கூறி, அவ்வள்ளலிடம் செல்லும் வழியை விளக்கி, தாம் சென்ற அவ்வழியாற் போகச் செய்தல் ஆற்றுப்படை எனப்படுகிறது. இந்த வகையில் அழியாச் செல்வமாகிய பேரின்பத்தைப் பெற விழையும் பெருமக்களை ஆற்றுப்படுத்துவதாக இருப்பது திருமுருகாற்றுப்படை. ஆக, இது ஒரு முந்துதமிழ்ப் பயண வழிகாட்டி.

சங்ககாலம் என்பதும் அக்காலத்தின் இலக்கியங்களின் பண்பும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியன. சங்ககாலப் புலவர்கள் அறிவொழுக்கங்களில் சிறந்தவர்களாகச் சான்றாண்மை மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்களைச் சான்றோர்கள் என்றும் அவர் தம் செய்யுள்கள் சான்றோர் செய்யுள் என்று கூறும் வழக்கும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற மனப்பாங்கு படைத்தவர்களாகவும் மக்களின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்தவர்களாகவும் அரசர்களை அஞ்சாது நின்று அறநெறியில் வழிநடாத்தும் பண்பு நிறைந்தவர்களாயும் இருந்துள்ளனர். அவர்கள் தம் வாழ்த்து மொழியையும் வாழ்த்துப் பாவையும் உரியவர்க்கே அன்றிப் பிறர்க்கு அளிக்காத் திண்மை உள்ளங் கொண்டவர்களாயும் விளங்கியிருக்கிறார்கள். அதாவது புகழுக்குரியவனையே அன்றிப் பிறரைப் பாடாதவர்களாயும் இருந்துள்ளனர். எனினும் ஜனன மரண சம்சார பந்தத்தில் சுழலும் மானிட ஜன்மங்களான அரசரை அவர்கள் பாடியிருக்கின்றனர். இவர்களின் இச்செயல்களிடத்திலிருந்து வேறுபட்டு இக்காலத்திலேயே சங்கத் தலைமைப் புலவராக விளங்கிய மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர் பிறவா இறவாப் பெரியோனாய முருகவேட் பெருமானைப் பாடிச் சிறப்பித்துத் தானும் சிறப்புப் பெற்றிருக்கிறார்.

திருமுருகாற்றுப்படை தோன்றக் காரணம் என்ன?

தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களுள் முதன்மை வாய்ந்ததாகவும் முதலில் தோன்றியதாகவும் கருதப்பட்டு வருகின்ற திருமுருகாற்றுப்படை இலக்கியம் எழுந்த வரலாறும் சுவையானது. கடைச்சங்கப்புலவர் தலைவரான நக்கீரனாரின் கதை திருவிளையாடற் புராணத்திலும் இடம்பெறுகின்றது. அதாவது தருமி என்ற ஏழைப்புலவனுக்கு பொற்கிழி அளித்த மதுரையாண்டவன் மீனாள் பாகம் பிரியா தமிழ்ச் சொக்கனின் திருவிளையாடலில், அவனுடன் நேருக்கு நேர் நின்று வாதம் செய்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்டு, இறையனாரின் திருப்பாடலில் குற்றங்கண்டு, அதனால் அவர் தம் திருவிளையாடலால் திருநுதல் வெப்பச்சூட்டிற்கு இலக்காகி வெப்பு நோய் வருத்த, அது தீரும் பொருட்டும் தன் குற்றம் நீங்கும் பொருட்டும் பனிபடர் பெருமை கயிலை மாமலைக்குச் செல்லமுற்பட்டு, திருப்பரங்குன்றத்தில் ஒரு நாள் பகற்பொழுதில் சிவபூஜை செய்தார். அப்போது ஒரு அதிசயம் இடம்பெற்றது.

மரத்திலிருந்து விழுந்த இலை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதி பறவையாக மாறிப் பறந்தது. இன்னோர் பாதி மீனாகி நீர்நிலையுள் ஓடி மறைந்தது. இதனைக் கண்ட நக்கீரார் சிவபூஜையிலிருந்து ஒரு கணம் தம்மை மறந்து இவ்வதிசயத்தில் மயங்கிப் போனார். இந்த மாயையைச் செய்து காட்டி சிவபூஜையிலிருந்து நக்கீரர் குழம்பக் காரணம் ஒரு பெண். வெறும் பெண்ணல்ல… கற்கிமுகி என்ற பெண்பூதம். சிவபூசையிலிருந்து தவறிய ஆயிரவரைப் பலி கொடுத்து ஒரு மஹாயாகத்தை ஆற்றக் காத்திருந்த அப்பூதம் முன்னரே தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரைப் பிடித்துத் தன் குகையில் அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆளுக்காகத் தேடிக் கொண்டிருந்தது. இப்போது நக்கீரரையும் பிடித்ததும் அது மிக்க மகிழ்ச்சியடைந்தது. ஆயிரவர் தொகை நிறைவு பெற்றது. மகிழ்ச்சியுடன் யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. உள்ளே முன்னரே பிடித்து வைக்கப் பட்டிருந்தவர்கள் கதறினார்கள். நக்கீரரை நோக்கி அழுதார்கள். ‘நீர் வந்து எம் உயிரையும் கொண்டு போகிறீரே’ என்று புலம்பினார்கள். அனைவருக்கும் சமாதானம் சொன்ன நக்கீரர் வெற்றிக்கடவுள் வேற்படையுடைய தமிழ்க்கடவுள் முருகவேளை நோக்கி ‘திருமுருகாற்றுப்படை’ என்ற அதியற்புதச் சுந்தரச் செந்தமிழ் நூலை குகைச் சிறையிலிருந்து பாடினார்.

உலகிலேயே சிறையிலிருந்து எழுந்த முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படையே.

எல்லோரதும் இதயக்குகையாகிய ‘தகராகாசத்தில்’ நீங்காது உறையும் குகனாகிய குமரன், கற்முகியின் குகை வெடிக்க, பூதம் அழிய, புலவர்கள் சிறை மீள, தன் திருக்கை வேலாயுதத்தைச் செலுத்தியருளினான். நன்றே நடந்தது. இப்படி ஆயிரவர்க்கு உயிர் கொடுத்த இலக்கியம் திருமுருகாற்றுப்படை. இது உடன் கொடுத்த உயிர். இன்று வரை அது எத்தனையோ ஆயிரவர்களுக்கு இவ்விலக்கியம் உயிரளித்து வருவதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.

நக்கீரர் தாம் உரைத்த நன்முருகாற்றுப்படை

குறிஞ்சி நிலத்தெய்வம் குமரன். அவனைச் சேயோன் என்று போற்றுகின்றது தொல்காப்பியம். பரிபாடலும் செவ்வேட் பெருமானின் செம்மை மிகு திறம் பேசுகின்றது. நக்கீரனார் உரைத்த இத்திருநூல் நூற்றுப் பதினேழு அடிகளால் இயன்றது. ‘தொடுக்கும் கடவுட் பழம் பாடல்’ என்று போற்றத் தக்கதாய் விழுமிய நடையும் மேம்பட்ட பொருட் செறிவும் கொண்டது. எவ்வழி நல்வழி? என்று வினவுவார்களுக்கு ‘இவ்வழி நல்வழி… இதில் செல்மின்’ என்று வழி சொல்வது திருமுருகாற்றுப்படை. இத்திருநெடும் பாட்டை நாள் தோறும் பாராயணம் செய்யும் இயல்பினர் பலர்.

‘நக்கீரர் தாம் உரைத்த நன் திருமுருகாற்றுப்படையைத்
தக்கோல நாள் தோறும் சாற்றினால்- முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தான் நினைத்த தெல்லாம் தரும்’

என்பது இவ்விலக்கியத்துடன் இணைத்து பாடப்பெறும் இவ்விலக்கியப் பயன் பேசும் வெண்பா ஆகும். ‘உலகம்’ என்ற மங்கலச் சொல்லுடன் ஆரம்பிக்கும் இவ் விலக்கியம்

‘உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
புலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு’

என்று ஆரம்பிக்கின்றது. ‘ஞாயிறைப் போல சுடர் வேல் கொண்ட சுந்தரன் முருகன். அவன் உலகெல்லாம் போற்றத்தக்க பெருமை வாய்ந்தவன். தமிழர்க்கு மட்டுமல்ல, அவன் உலகப் பெருந் தலைவன். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கல்லினுள் தோரைக்கும் கருப்பைப் புழுவிற்கும் புல்லுணர்வே தந்து போற்றும் தயாளன்..’ இவ்வாறான உணர்வு தோன்ற ஆரம்பமாகிறது திருமுருகாற்றுப்படை.

‘மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன்’ என்று முருகனை பேசுவார் நக்கீரர். ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று பெருமானைக் காட்டும் திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலின் எழுச்சிக்கு நக்கீரார் தம் ஆற்றுப்படை நூலிலேயே அடித்தளம் இடுகின்றார். சமணம், பௌத்தம், கிறித்தவம், போன்ற எந்த ஒரு சமயமும் கடவுளை ஆணும் பெண்ணுமாகக் கண்டதே இல்லை. அதனை செம்மை வழி என்று நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. அப்படியிருக்க இந்து மதம் மட்டுமே இவ்வாறு தமிழிலும் பேசும் வல்லமையை கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கைக்கொண்டு விளங்கும் பெருமை வாய்ந்தது என்பதற்கு ஒரு சான்றாயும் இந்நூல் காணப்படுகின்றது.

திருத்தல யாத்திரை செய்ய ஆற்றுப்படுத்திய நூல்

காதலுக்கும் போருக்கும் முதன்மை தந்தது சங்கத்தமிழரின் வாழ்வு. அதற்கு ஏற்றாற் போல காதற் தெய்வமாகவும் வெற்றித் தெய்வமாகவும் விளங்குபவன் முருகன். திருமுருகாற்றுப்படை அவனைப் பேசும் போது

‘இருபேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மாமுதல் தடித்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்’

என்று கூறும். பெருமான் மனிதஉடலும் விலங்கின் உடலும் இணைந்து உருவெடுத்த அசுரனாகிய பெரிய சூரனை, அவன் அஞ்சும் வண்ணம் சென்று, ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்று, அசுரர்களுடைய கொட்டம் அழியும் படியாக, கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் வடிவாக அசுரன் உருமாறி நின்ற போது, அதன் அடிமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியையுடைய அறிய முடியாத பேரறிவையும், பெரும் புகழையையும் உடைய செவ்வேலையுடைய அழகன் முருகன் என்று விளக்கிக் காட்டுவார்.

ஆறுமுகனுக்குகந்த ஆறுபடை வீடுகளுள் முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றில் இறைவன் முருகன் இயற்கையோடிணைந்த அருவுருவ நிலையில் விளங்கும் சிறப்பை விளக்கிய நக்கீரார் வெற்றியின் நகராகிய ‘ஜெயந்திபுரத்தை’ (திருச்செந்தூர்), அவனது இரண்டாவது படைவீட்டை நோக்கி ஆற்றுப்படுத்துகையில் வெற்றிக் களிப்பில் மகிழக்காணலாம். திருச்சீரலைவாய் என்ற செந்திலம் பதியாகிய அவ்வூரின் பெருமை பேச முற்படும் போதே பெருமானின் ஆறு திருமுகத்தின் வண்மையும் அவன் பன்னிரு கரத்திண்மையும் பற்றி சுவைபடப் பேசுகின்றார்.

“மாஇருள்ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரித்தன்று ஒருமுகம்’

என்று பெரிய இருள் நிறை இவ்வுலகு குற்றமின்றியிருக்க பலவகையான கதிர்களைப் பரப்பியது ஒரு முகம் என்பார். இவ்வாறாக ஆறுமுகத்தின் செய்கையையும் அழகுறப் பேசுவார். இவ்விடத்தில் எங்கும் அவர் பரந்த உலக நோக்கில் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேசியிருப்பது ஈண்டு சிந்திக்கவும் போற்றவும் தக்கது. கதிர் என்ற சொல்லாட்சியில் முருகப் பெருமானின் புகழ்பெற்ற திருத்தலமான கதிர்காமம் ஈழநாட்டில் இருப்பதும் சிந்திக்கத் தக்கதாயுள்ளது.

இப்படியாக ஆறு திருமுகங்களின் செய்கையையும் சொல்லி வந்த நக்கீரனார்,

‘ ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்குமே’

என்று சொல்வதை அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் சங்ககாலத்திலே வேதநெறியும் வேதநெறி நின்று யாகங்களை வைதீக தர்மத்துடன் நால்மறை முழங்க ஆற்றும் பண்பாடும் நிலவி வந்திருப்பதை தெளிவுறக் காட்டி நிற்கின்றது.

முதலில் ‘மறுவில் கற்பின் வாள்நுதல்’ என்று தேவயானையை காட்டிய நக்கீரர் இவ்விடத்தில் ‘குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளி’ என்று வள்ளியம்மையை போற்றிக் கூறுகின்றார். இதே போல முருகனின் பன்னிரு திருக்கரங்களின் செய்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். திருச்செந்தூரை ‘உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்’ என்று போற்றித் துதிக்கிறார். முருகனின் மூன்றாவது படைவீடு பழனி என்று அறியப்படும் திருவாவினன்குடி. ஆங்கே உணவையும் உறக்கத்தையும் விடுத்து உண்மைப் பரம்பொருளான முருகனையே சிந்திக்கும் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்ட முனிவர் பெருமக்களாகிய ஞான தபோதனர்கள் பழனியாண்டவனைத் தேடிக் காண விழையும் காட்சியை அற்புதமாகச் சித்தரிக்கின்றார்.

அப்போது

‘கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்’

என்று அவர்களை விழித்துப் போற்றுவார். அத்துடன் ‘காமமொடு கடுங்சினம் கடந்த காட்சியர்’ என்றும் கூறுகிறார்.

இந்த இடத்திலேயே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளைப் பற்றியும் தேவேந்திரனைப் பற்றியும் புகழ்ந்துரைத்துப் போற்றி சிறப்பிக்கின்றார் நக்கீரனார். இப்படியே பலவற்றையும் சொல்லி ‘ஆவினன் குடி அசைதலும் உரியன்’ என்று சொல்லுவார்.

வைதீகமும் கிராமியமும் வணங்கும் வள்ளல்

சைவ உலகம் நக்கீரரை அவர் தம் பெருமையைக் கருத்தில் கொண்டு ‘நக்கீர தேவ நாயனார்’ என்று கூறிப் பெருமை செய்கின்றது. முருகப் பெருமானின் நான்காவது படைவீடு திருவேரகம் என்ற சுவாமிமலை. கும்பகோணத்திற்குச் சமீபமாக உள்ள இத்திருத்தலத்தில் பெருமான் தகப்பன் சாமியாகக் காட்சி கொடுக்கிறான். இச்சாமிநாதனைச் சொல்ல வந்த நக்கீரர் அந்த இடத்தில் வைதீக வேத தர்மம் பற்றி மிகச்சிறப்பாகச் சொல்கிறார்.

‘இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி’

தந்தை, தாய் வழியாக இருவர்க்கும் உரிய கோத்திரமாக தனித்தனியே ஆகக் குறைந்தது இரண்டிரண்டு முனிவர்களையேனும் சட்டிக் காட்டும் பலவாக வேறுபட்ட தொல்குடி (பாரத நாட்டினர் தாம் முனிவர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிப் பெருமை கொள்பவர்கள்).

‘மூன்று வகை குறித்த முத்தீச் செல்வம்’

மூன்றுவகையான யாகாக்னியைப் போற்றுவதையே செல்வமாகக் கொண்டவர்கள்

‘ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்’

மூன்று புரிகளைக் கொண்ட மூன்று நூல்களை (பூணூல்களை) அணிந்தவர்கள் இவ்வாறாக வைதீக, வேத, வேதாங்க தர்மம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே (சங்ககாலத்திலும் அதற்கு முன்னதாகவுமே) தென்னாட்டில் செழித்திருந்ததைப் பதிவு செய்யும் நக்கீரர் சரவணபவனின் ஷடாட்சர மஹாமந்த்ர மகிமையையும் இங்கு சொல்லாமற் சொல்கிறார்.

வைதீக வழக்கில் வடிவேலன் வணக்கம் சொன்ன நக்கீரர் அடுத்து ஐந்தாம் படைவீடாக சுதந்திர மயமான குன்றுதோறாடலைச் சொல்ல வருகையில் கிராமிய வணக்கத்தையும் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.

திருவேரகத்தைப் பாடும் போது அந்தணர் போற்றும் மந்தி ரரூபமாக வேதத்தின் விழுப்பொருளாய் முருகனைக் காட்டும் பெருமானார் அனுபூதிமான்களுக்கே அல்லாமல், மலை வாழ் வேடருக்கும், அவர்கள் போன்ற அடிநிலை மக்களுக்கும் எளியனாய் வந்து முருகன் அருளும் தன்மையைப் போற்றி செய்கிறார். முருகன் எழுந்தருளியுள்ள மலைகள் யாவும் இதனுள் அடங்கும் எனினும் சிறப்பாக ‘புயற்பொழில் பயற்பதி நயப்படு திருத்தணி’ என்ற திருத்தணிகையை இன்று ஐந்தாவது படைவீடாகக் கொள்வாரும் உளர்.

ஆறாவது படைவீடாக பழமுதிர்ச்சோலை கூறப்படுகின்றது. மாவிளக்கேற்றி சிவந்தமாலைகள் சாற்றி மலர்கள் தூவி செந்தமிழால் பாடி பரமதயாளனாகிய பக்திசுலபனான பரமன் முருகனை வழுத்தும் பாங்கு இங்கு சொல்லப் படுகின்றது. தூபம் காட்டி குறிஞ்சிப் பண்ணிசைத்து முருகனை வழிபடுவது பழைய காலத்தமிழர் மரபு. அதனையும் நக்கீரர் இங்கே சொல்கிறார்.

“வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே”

என்று நிறைவு செய்கிறார். அதாவது தன்னை விரும்பி வழிபடும் அன்பர்கள் தாம் விரும்பியது நிறைவேறி வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமான விஷயங்களாகும் என்கிறார்.

முருகனைப் போற்ற ஒரு முந்துதமிழ் மாலை

‘முந்து தமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி’ என்று அருணகிரிநாதர் சாற்றுவார். முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும்.

‘வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ’
‘வானோர் வணங்கு வில் தானைத் தலைவ’
‘மாலை மார்ப, நூலறி புலவ’
‘வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ’
‘அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக’
‘பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே’
‘மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி’
‘சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி’
‘போர்மிகு பொருந! குரிசில்!’
‘சேண் நின்று இழுமென இழி தரும் அருவிப் பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’

என்றும் சொல்லி இத்திருமுருகாற்றுப்படை நூலை முழுமையாக்குகிறார். பழமுதிர்சோலையில் கண்ணனும் கந்தனும் (இரு கள்ளழகர்களும்) கலந்து நிற்கும் எழிலை வர்ணிப்பதுடன் இந்நூல் பூரணத்துவம் பெறுவதாகவும் கொள்ளமுடிகின்றது. முருகாற்றுப் படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

சுத்த ஜலத்தினால் திருமுழுக்காட்டி, நெய்வேதனங்கள் சமர்ப்பித்து, சோடசோபசாரம், ராஜோபசாரம், முதலியவற்றையெல்லாம் செய்து பகவான் ஸ்கந்தனை ஆயிரம் நாமத்தால் அர்ச்சித்து சகல வாத்திய கீத நிர்த்தன உபசாரங்களுடன் ஊர்வலம் செய்வது எல்லோருக்கும் இலகுவில் செய்யவல்லதல்ல. அப்படிச் செய்யாத போதும் ‘திருமுருகாற்றுப்படையை’ ஓதினால் போதுமாம். அவன் அருள் நிறைவாகக் கிடைக்கும்.

‘பரங்குன்றில் பன்னிரு கைக்கோமான் தன் பாதம்
கரங்கூப்பிக் கண் குளிரக் கண்டு – சுருங்காமல்
ஆசையால், நெஞ்சே, அணிமுருகாற்றுப் படையைப்
பூசையாக் கொண்டே புகல்’

ஐப்பசித் திங்களில் ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகவுள்ள உயரிய நல்ல வேளையில் கந்தவேற் பெருமானைப் பாட, போற்ற நல்லதொரு பாமாலையான இதனைப் பாடிப் பரவுவோம்.

தமிழுக்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு மிக ஆழமானது என்பதை நிரூபிக்க கிடைத்த அற்புதப் பொக்கிஷமான, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் அப்பால் புராதனமும் இலக்கியச் செழுமையும் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழும் திருமுருகாற்றுப்படை என்ற ஞானக் கருவூலத்தை, அதன் புகழை உலகெங்கும் பரப்புவோம்

No comments:

Post a Comment