Sunday, April 24, 2011

ஆன்மீக கேள்வி பதில்...


ஜபமும் தியானமும் செய்வதால் வரப்போகும் துன்பத்தை நீக்கிக்கொள்ள முடியுமா?

தீவினைகள் மூன்று வகைப்படும். அவையாவன: வந்தவை, வந்திருப்பவை, வரவிருப்பவை. இவற்றைத் தொலைக்கக்கூடியது நாமஜபம்.

நோய் வந்தால் சில மருந்துகளை உட்கொண்டு நோயை நீக்கிக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் நோயையும் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டுவிடவும் இயலும் அல்லவா?

அதுபோல், வரவிருக்கும் தீவினைகளையும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு மேற்கொள்ளப்படும் ஜபம், தியானம் போன்ற தவ சாதனைகளினால் விலக்கிக்கொண்டுவிடலாம்.

அல்லது வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிடலாம்.

சில பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றாலும் துன்பங்களை நீக்கிக்கொள்ள முடியும்.
பொதுவாக மாசில்லாத பக்தி கொண்டவர்கள், துன்பங்கள் நீங்கவேண்டும் என்றுகூட இறைவனிடம் வேண்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருளால் பெறுகிறார்கள்.

கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?

கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும்.

நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த வழக்கத்தின் நோக்கமாகும்.

ராமகிருஷ்ணர் தீர்த்த யாத்திரையைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்து, உங்கள் கேள்விக்கும் ஓரளவு பொருந்துவதாக இருக்கிறது.

ராமகிருஷ்ணரின் அந்த உபதேசம் வருமாறு.

"வயிறு நிறையப் புல்லைத் தின்ற பசு, ஓர் இடத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டு அசைபோடுகிறது. அதுபோலவே, தீர்த்த யாத்திரைக்கு நீ சென்று வந்தால் அந்த அந்தத் தெய்வீகத் தலத்தில் உன் மனதில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனி இடத்தில் உட்கார்ந்து அவற்றிலேயே ஆழ்ந்து போகவேண்டும். அவ்விதமின்றி அங்கிருந்து வந்ததும் அந்த எண்ணங்கள் உன் மனதை விட்டு அகன்றுபோகும்படி நீ உலகியல் விவகாரங்களில் தலையிடுவது கூடாது."

இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்தப் பூக்களைப் பயன்படுத்தக்கூடாது? எந்த எந்த நேரங்களில் கோயிலுக்குப் போகக்கூடாது?

வாசனை இல்லாத பூக்களையும் மகரந்தமில்லாத பூக்களையும் பூஜைக்கு உபயோகிக்கும் வழக்கமில்லை. கோயிலில் சந்நிதி திறந்திருக்கும் நேரங்கள் அனைத்தும் கோயிலுக்குப் போவதற்கு உரிய நேரங்கள்தான்.

பூஜையின்போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.

உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்.

முக்கியமாகக் கோயில்களில், பல விதமான தீபங்களை சுவாமிக்கு ஆராதனையின்போது காட்டுகிறார்கள். அதன் கருத்து என்ன?

தீபாராதனையில் வரிசையாக அலங்கார தீபம், ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கர்ப்பூர தீபம் என்று தீபங்களைக் காட்டும் வழக்கம் இருந்துவருகிறது. பலவாகக் காணும் உலகம், ஐம்பூதங்களில் ஒடுங்கி, அது முக்குணங்களில் ஒதுங்கி, அதுவும் ஒன்றுபட்டு, முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கர்ப்பூரம் போல் நிர்க்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பது கருத்து.

திருவிளக்கிலுள்ள சுடரை நாம் குளிரச் செய்யலாமா அல்லது தானாக குளிரவேண்டுமா?

திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்' என்கிறார்கள்.

பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்?' என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள்.

இவையெல்லாம் திருவிளக்குச் சுடரை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது அல்லது வெறுங்கையினால் அணைப்பது கூடாது என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எழுந்த கதை என்று நாம் கொள்ளலாம்.

கோயிலுக்குச் சென்றால், மூன்று தடவை பிரதட்சணம் வரவேண்டும்' என்று சிலர் சொல்கிறார்கள். அவ்விதம் சொல்வதற்கு என்ன காரணம்?

கோயிலுக்குச் செல்லும் நாம் சொல், செயல், சிந்தனை மூன்றினாலும் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தில் அமைந்த ஒரு வழக்கத்தையொட்டி, நாம் ஆலய வழிபாட்டில் மூன்று தடவைகள் பிரதட்சணம் செய்கிறோம்.

கோயில்களில் நிவேதனம் செய்த பின்பு அந்தப் பிரசாதத்தை எதிரில் உள்ள பலிபீடத்தில் வைத்துப் பிறகு காக்கைக்குப் போடுகிறார்கள். இது ஏன்?

பூஜையை வீட்டில் செய்தாலும் கோயிலில் செய்தாலும் பூஜையின் முடிவில் தாழ்ந்த உயிர்களுக்குச் சிறிதாவது உணவளிக்க வேண்டும். அதுதான் பலி. அதற்குத்தான் பலிபீடம்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் போலன்றி வடநாட்டில் மூலவரைப் புகைப்படம் எடுக்கிறார்கள். அதை அட்டைப் படமாகப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வெளியிடுகிறார்கள். வடநாட்டுக் கோயில்களுக்கும் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் இந்த வேறுபாடு இருப்பது ஏன்?


தமிழ்நாட்டுக் கோயில்களில் மூலவர் விக்கிரகத்தைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. உற்சவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். தமிழ்நாட்டின் சில கோயில்களில், ஓவியர்கள் வரைந்த மூலவர் படங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மற்றபடி கோயிலில் இருக்கும் அதே மூலவர் படங்களை அச்சிட்டு விற்பனை செய்வதில்லை.


மூலவர் உலகம் என்ற மரத்தின் வேர் போன்றவர். உற்சவர் அந்த மரத்தின் மலர், காய், கனி போன்றவர். வேரை இருக்கும் இடத்தை விட்டு அசைத்தால் மரம் உலர்ந்து போகும். மலர், காய், கனிகளை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோகலாம்.

மூலவரை அவர் இருக்கும் இடத்தில்தான் தரிசிக்க வேண்டும். அவரைக் கோயிலுக்குச் சென்று தரிசிக்காதவர்களுக்கும்கூட அருள் புரிவதற்காக, அவர் உற்சவமூர்த்தி வடிவத்தில் வீதியில் வருகிறார். மூலவர் வடிவம் ரகசியம். உற்சவ வடிவம்தான் பிரகடனம் என்பது தமிழ்ப்பண்பு.

தென்னிந்தியாவில் பழமையான கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு விக்கிரக ஆராதனையும் ஆகமத்தில் கூறியபடி நடந்துவருகிறது. வட இந்தியாவில் இஸ்லாமியர்களின் படையெடுப்புக்களால் பழைய கோயில்கள் சிதைந்து போய், ஆராதனை முறைகளும் பல இடங்களில் சாஸ்திரப்படி இல்லை. அதுதான் வேறுபாட்டிற்குக் காரணம்.

மனித வாழ்க்கையின் இலட்சியம் என்ன?

மறைமுகமாகச் சொன்னாலும், வெளி ப்படையாகச் சொன்னாலும், சுருக்கமாகச் சொன்னாலும், விளக்கமாகச் சொன்னாலும், நேரடியாகச் சொன்னாலும், சுற்றி வளைத்து சொன்னாலும் மனித வாழ்க்கையின் இலட் சியம் ஆத்மஞானம் பெறுவதும், உலகிற்கு நன்மை செய்வதுமே ஆகும்.

நூலோர் கூறியவற்றில் தலைசிறந்து விள ங்குவது `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' - இது பொருளுக்கு மட்டுமின்றி அருளுக்கும் பொருந்தும்.

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


இயற்கையின் ஒரே தடவை மட்டும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஒன்றுமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாப் பொருள்களிடத்தும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. ஒரு தடவை மழையாக விழுந்த நீர் பல தடவை மழையாக விழவல்லது. அங்ஙனம் நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!
ஜீவன் என்பது ஓர் ஆத்மா, அதற்கு உடலங்கள் மாறி மாறி அமைவது அதற்குப் புதிய புதிய அனுபவங்களைத் தருதற்பொருட்டேயாம். ஒரே தடவை ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகும் மாணாக்கள் அதிகம் கற்க முடியாது. கல்வி பூர்த்தியாகும் வரையில் திரும்பத் திரும்ப அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயற்கையின் பேரமைப்பாகிறது.

ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு என்பதாக முடியும். ஒரு பிறப்போடு அழிந்துபோகும் ஆத்மா வாழ்ந்திருக்கும் போதும் நன்மைக்காகப் பாடுபட வேண்டியதில்லை என்று ஏற்படும். மனிதனுக்கு ஒரே ஜன்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ சுவர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார். என்பதும் பொருந்தாது. ஒரு ஜன்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையாது அளிக்கிறது. மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும் பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜன்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூராயமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.


பாவச் செயல்களைத் தவிர்ப்பது எப்படி?


நாம் எங்கே இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகளையெல்லாம் அவர் அறிவார், எங்கும் நிறைந்த அவர் நமக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறார் - இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டு மறவாமல் எப்போதும் நினைவில் வைத்திருந்தால், பாவம் செய்பவர்களாக நாம் இருக்க மாட்டோம்.

இறைவன் அருளைத் துணைாயக் கொண்டு வாழ்ந்தால் தான், மனிதன் தீயவற்றிலிருந்து விலகி வாழ முடியும்.

ஆழமான தெய்வசிந்தனைகள், உள்ளத்தில் தோன்றும தீய சிந்தனைகளை அகற்றும, எனவே நாம் நம் உள்ளத்தை் தூய சிந்தனைகளால் தெய்வ சிந்தனைகளால், புனிதமான சிந்தனைகளால் நிரப்பியபடியே இருக்க வேண்டும்.

மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவனே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் கொண்டவன் தவறு செய்ய மாட்டான்.

மனிதன் கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது. எதிர்காலத்தை நினைத்து ஏங்கவும் கூடாது. மாறாக, நிகழ்காலத்தில் ஆன்மிகமும் அறமும் பொருந்திய வாழ்க்கை நடத்துவதிலேயே கருத்துச் செலுத்த வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோருமே தவறு செய்கிறோம். பிறகு வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறோம். கருணைக் கடலான, தயாபரனான இறைவனும் நம் குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிகிறான்.

கிழக்குத் திசையை நோக்கி அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?

இவற்றுக்குச் சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு.

மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது.

ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம்.

இயமலை வடக்கில் உள்ளது. எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கும் திசையை நோக்கித் தவம் செய்தால், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்றும் கொள்ளலாம்.

சூரிய பகவான் நாள்தோறும் கண்கண்ட தெய்வமாகக் கிழக்கில் உதித்து நம்மை தட்டி எழுப்பி, நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் ஒளி தந்து வழி காட்டுகிறார். ஆதலால் கிழக்குத் திசையை நோக்கிய வழிபாடு சிறந்தது என்று ஆயிற்று. இதற்குச் சாஸ்திரப் பிரமாணமும் உண்டு.

நடுப்பகலில் வடக்கும் தியானத்திற்கும் உரியது. மாலையில் மேற்கும் உரியது. தெற்குத்திக்கில் யமலோகம் என்று சாஸ்திரம் கூறியதால், அது சுப காரியங்களுக்கும், தெய்வ வழி பாட்டுக்கும் உரியதாகக் கொள்ளப்படவில்லை. இந்த நடை முறைகளெல்லாம் சாதாரண மக்களுக்குதான்; ஞானிகளுக்கு இல்லை.

திசை பற்றிய இந்த நியமம் தெய்வத்திற்கும் இல்லை. மயிலாப்பூரில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தட்சிணாமூர்த்தி எல்லா இடங்களிலும் தெற்கு நோக்கித்தான் இருக்கிறார். ஷ்ரீராமகிருஷ்ணர் வழிபட்ட பவதாரிணியும் தெற்கு நோக்கியே இருக்கிறாள்.

இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதான் விளக்கம் என்ன?


பகவத்கீதையில் (9.27) பகவான், "நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்துதாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதையெல்லாம் எனக்கு அர்ப்பணமாகச் செய்" என்று கூறியுள்ளார்.

நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பதும், நாம் உடுக்கும் துணியை இறைவனுக்கு உடுத்திய பிறகு நாம் உடுத்துவதும், நாட் கட்டும் வீட்டை அவன் கோயிலாகக் கருதுவதும் சிறந்த தெய்வ ஆராதனையாகும்.

நாம் நீராடி மகிழ்வதால் இறைவனுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறோம்.

"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்கிறார். நம்மாழ்வார். இவை அனைத்தும் உன்னத மனதின் இயல்பான வெளிப்பாடுகள். இந்த ஆராதனை முறை நெடுநாளாக நமது மூதாதையர் கண்ட வழிபாட்டுச் சம்பிரதாயம்.

உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள், அன்பிற்கு உரியவர்கள், உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்', வாங்கியும் கொடுக்கிறோம். அது போன்று எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமான உறவினனான (சரியாகச் சொல்லப்போனால், உண்மையில் உள்ள ஒரே உறவினனான) நம் இறைவனோடு, நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்புகொள்கிறோம்.

பிரதிமா, பிரதீகம் ஆகியவற்றை விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


மனிதர்களுக்கு இருப்பதைப் போன்று கை கால் முதலிய அவயவங்களுடன் இருக்கும் வடிவம், அல்லது படம், அல்லது விக்கிரகம், பிரதிமா எனப்படும்.

இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை நினைவுபடுத்தும் குறி அல்லது அங்கம் `பிரதீகம்' எனப்படும்.

பிரதிமா என்பது தமிழில் விக்கிரகம் அல்லது புதுமை எனப்படும். ஒருவரைப் போல உருவம் செய்து, விக்கிரகத்திலோ படத்திலோ ஊற்றம் வைத்து வழிபடுவது பிரதிமையைப் பூஜிப்பதாகும். உதாரணமாக, இறைவன் அல்லது இறைவியின் திருவுருவத்தை விக்கிரகம் அல்லது படத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுவது பிரதிமா உபாசனையாகும்.

பிரதீகம் என்றால் அடையாளம் என்று பொருள். இறைவன் அல்லது இறைவி மீது நமக்கு இருக்கும் பக்தியை ஓர் அடையாளத்தை வைத்து, அதில் செலுத்துவது பிரதீக உபாசனையாகும்.

உதாரணமாக திருமாலைச் சாளக்ராமச் சிலையிலும், சிவபெருமானை சிவலிங்க வடிவத்திலும், அம்பாளை ஷ்ரீ சக்கர வடிவத்திலும் வழிபடுவது பிரதீக உபாசனையாகும்.

பிரதிமா, பிரதீகம் ஆகிய இரண்டும் மேலெழந்தவாரியாகப் பார்ப்பதற்கு ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு - பிரதிமை என்பது உருவம், பிரதீகம் என்பது அடையாளம் என்பதை அறிக.

7 comments:

  1. ஆண்மீகம் இளமை

    ReplyDelete
  2. ஆண்மீகம் இளமை

    ReplyDelete
  3. ஆண்மீகம் இளமை

    ReplyDelete
  4. இவ்வாறான ஆன்மீக தகவல்களை தினமும் தாருங்கள் எனக்கு ஆன்மீக தகவல்களை கற்க விருப்பம்

    ReplyDelete
  5. அய்யா எனது கனவில் கடந்த சனிக்கிமை அதிலை நாலு மணியளவில் கருப்புசாமி இரத்தகாவுகேட்டதாகவும் பூசாரி மனிதரைவெட்டி கருப்புக்கு ரத்தகாவு என அரிவாள் இரத்ததை நாக்கால் மூன்று முறை தெ ளித்தார்.. இன்று காலை நான்கு மணிக்கு எனது அக்கா கணவர் விபத்தில் சிக்கி மருத்துவனையில் அவசரசிகிசை பிரிவில் உள்ளார் தலை யில் அறுவை சிகிச்சைசெய்துள்ளனர் இன்னும் கண் முழிக்கவில்லை.. இதன் அறிகுறி என்ன என்னசெய்வேண்டும்...

    ReplyDelete
  6. திருக்கோயில்களில் செய்யப்படும் பரிகாரங்களினால் கோயிலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா. அப்படி என்றால் அதற்கு ஏதும் பூஜை செய்ய வேண்டுமா. தகுந்த ஆதாரங்களுடன் தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்

    ReplyDelete
  7. திருக்கோயில்களில் செய்யப்படும் பரிகாரங்களினால் கோயிலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா. அப்படி என்றால் அதற்கு ஏதும் பூஜை செய்ய வேண்டுமா. தகுந்த ஆதாரங்களுடன் தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்

    ReplyDelete