Wednesday, May 11, 2011
சைவ சமயம்.
சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை.
1 சைவ சமயத்தின் தோற்றம்
2 சைவத்தின் மூன்று பிரிவுகள்
3 சைவ வழிபாட்டின் பண்புகள்
சைவ சமயத்தின் தோற்றம் மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அதேவேளை வேறு சில ஆதாரங்கள் சைவ சமயம் கி.பி. மத்திய இந்தியாவில் தோன்றி பின்னர் தென்னிந்தியாவுக்கு பரவியாதாக தெரிவிக்கின்றன.
சைவத்தின் மூன்று பிரிவுகள்இன்று நிலவும் சைவத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள். காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது.
வீர சைவம் என்பது சைவ சமயப் பிரிவுகளில் ஒன்றாகும். இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.
சித்தாந்த சைவம் சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம். சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன. சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.
தத்துவ அடிப்படைகள்
1. பதி (இறைவன்)
2. பசு (உயிர்)
3. பாசம் (மலங்கள்) ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.
இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.
சித்தாந்தமும் வேதாந்தமும் "உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பெளத்தம், சமணம், மீமாம்சகம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்."
சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும் சைவ சித்தாந்தம் சாதியமைப்பை பெருமாபாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது. இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுவர்களாகவும் இருக்கின்றார்கள். இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.
சைவ வழிபாட்டின் பண்புகள் பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும். சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.
சைவக் கிரியை சைவக் கிரியைகள் என்பது சிவநெறியில் ஒழுகுவோர் மந்திரம், தந்திரம், பாவனைகளுடன் செய்யும் செயல்கள் அல்லது கருமங்களைக் குறிக்கும். கிரியை என்ற சைவ சமய கலைச்சொல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுஷ்டிக்கப்படும் நியதிச்செயல்கள் என்னும் கருத்தில் சமயப் பிரமாண நூல்களில் வழங்கி வருகின்றது. கருமம், சடங்கு, பூசை என்பனவும் அதே பொருளைத்தரும் சொற்கள் ஆகும். சைவசமயிகளுக்குரிய இத்தகைய கிரியைகள் பற்றி, சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த உபாகமங்களும் இவற்றின் அடிப்படையில் எழுந்த பத்ததிகளும் விரித்துக் கூறுகின்றன.
கிரியை செய்வதால் உண்டாகும் பயன் இச்சைவக் கிரியைகளைச் செய்வதால் இம்மையில் அறம், பொருள், இன்ப வாழ்வுகளைப் பெற்று வாழ்தலும், மறுமையில் வீடு பேற்றினைப் பெறுதலுமாம். கிரியைகளை முறைப்படி செய்வதனால் மனத்தூய்மை உண்டாகும்; மனத்தூய்மையினால் பரதருமங்கைகூடும். பரதருமத்தினால் ஐம்பொறி அடக்கமாகிய சாந்தி உண்டாகும் சாந்தியினால் யோகநெறி கைகூடும் யோகத்தினால் தத்துவ ஞானங் கைகூடும் தத்துவ ஞானத்தினால் பரமுத்தி சித்திக்கும். ஆகவே கிரியைகள் ஞானத்திற்கு மூலகாரணமாய் வீடு பேறாகிய பரமுத்திப்பேற்றை தரும்.
சைவக் கிரியை ஆன்மார்த்தக் கிரியை, பரார்த்தக் கிரியை என இரு வகைப்படும்.
ஆன்மார்த்த கிரியையானது பூர்வக் கிரியை, அபரக் கிரியை என இரு வகைப்படும்.
ஆன்மார்த்தம் என்பது தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும்.
பரார்த்தம் என்பது பிறர் நன்மை கருத்திச் செய்யப்படும் ஆலய வழிபாடுகளைக் குறிக்கும்.
ஆன்மார்த்தக் கிரியையின் பிரிவுகள்பூர்வக் கிரியை ஓர் உயிர் தாயின் கற்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும்.
அபரக் கிரியை மரண சமயம் முதல் சபிண்டீகரணம் வரையும், அதன் மேல் வருட சிராத்தம், மகாளயம், அமாவாசை தர்ப்பணம் வரையில் விரிந்து செல்கின்றது. ஆன்மார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும்.
நைமித்தியம்: தீட்சை, ஆசாரியாபிஷேகம், விரத உத்தியாபனம், அந்தியெட்டி முதலியவற்றைக் குறிக்கும்.
காமியம்: விரதம், சாந்தி முதலியவற்றைக் குறிக்கும்.
ஆன்மார்த்தக் கிரியையின் அங்கங்கள் ஆன்மார்த்தக் கிரியைகளின் அங்கங்களான பூர்வக் கிரியை வகைக்குள் இருது சங்கமனம், கர்ணவேதனம், நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், உபநயனம், விவாகம், தீட்சை, சந்தியாவந்தனம், ஆசாரியாபிஷேகம், சிவபூசை என்பவை காணப்படுகின்றன.
பரார்த்தக் கிரியையானது நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகைப்படும்.
நித்தியம் என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் நித்திய பூசையைக் குறிக்கும். இது ஆலயங்களின் அமைப்புக்கும் மரபுக்கும் ஏற்ப ஒரு காலப் பூசை தொடக்கம் ஆறு காலப் பூசை, பன்னிரு காலப் பூசை (திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறுவது) என விரிந்து செல்லும்.
நைமித்தியம் என்பது நித்திய பூசை வழிபாடுகளில் ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நடைபெறும் விஷேட பூசைகள், உற்சவங்களைக் குறிக்கும். பரார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. எல்லா உயிர்களினதும் நன்மை கருதி இறைவனை வழிபடுவதற்காகத் திருக்கோவில் அமைத்தல் முதலான கிரியைகளைக் குறிக்கும். இது கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம் என்பது திருக்கோவில் அமைப்பதற்குரிய இடத்தை ஆராய்ந்து தெர்ந்தெடுத்து பரிசோதித்து பண்படுத்தி நாட்கல் நாட்டித் திருக்கோவில் அமைத்து, மூர்த்தியை அமைத்து பிரதிஷ்டை செய்து முடிக்கும் வரையுள்ள கிரியைகளின் தொகுதியாகும்.
பிரதிஷ்டாதி உற்சவாந்தம் என்பது பிரதிஷ்டை நடைபெற்றபின் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய பூசை, அவற்றின் காலங்கள், நித்திய பூசை முடிவில் செய்யப்படும் உற்சவங்கள் முதலிய கிரியைகளின் தொகுப்பாகும்.
உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என்பது நித்திய பூஜை முதலியவற்றில் ஏற்படும் குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்படும் நைமித்திய உற்சவங்கள் அவற்றின் வகைகள் தொடங்கும் முறைகள் என்பவற்றின் தொகுதியாகும்.
பரார்த்தக் கிரியையின் வகைகள் பரார்த்தக் கிரியைகளை நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகையாகப் பிரிக்கலாம்.
நித்தியக் கிரியை என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் கிரியைகளைக் குறிக்கும். உதாரணமாக நித்திய பூஜை, நித்திய அக்கினிகார்யம், நித்திய பலி, நித்திய உற்சவம் என்பனவாகும்.
நைமித்தியக் கிரியை என்பது நித்திய பூசையில் உண்டாகும் குறைகளை நீக்குதல் முதலான காரணங்கள் கொண்டு செய்யப்படும் விஷேட பூசைகள், உற்சவங்கள் என்பன நைமித்தியக் கிரியை என அழைக்கப்படும். உதாரணமாக மகோற்சவம், கும்பாபிஷேகம், நவராத்திரி என்பவற்றைக் குறிக்கும்.
காமியக் கிரியைதாம் விரும்பிய பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கிரியைகளாகிய அபிஷேகம், அர்ச்சனை முதலியன காமியக் கிரியை எனப்படும்.
பூர்வக் கிரியைகள்
தீட்சை தீட்சை சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக் கிரியைகளில் ஒன்று. சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிபடுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும். சைவ சமயிகள் சமயப் பிரவேசம் செய்வதற்காக வழங்கப்படும் கிரியை இதுவாகும். அருட்பாக்களை ஓதுவதற்கும், புராணங்களைப் படிப்பதற்கும், ஞான சாத்திரங்களைக் கேட்டல், படித்தலுக்கும், பிரதிஷ்டை, விவாகம், அந்தியேட்டி, சிரார்த்தம் போன்ற நம் சமயக் கிரியைகளைச் செய்தவற்கும், செய்விப்பதற்கும் தகுதியுடையவர்கள் தீட்சை பெற்றவர்களே.
தீட்சை என்பதன் பொருளும் பயனும் 'தீக்ஷா' என்னும் சொல் 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது. நமது முயற்சி, உடம்பின் உள்ளும் புறமும் உள்ள அழுக்குளை நீக்குதலும், ஆகாரம் ஊட்டிச் சுத்தமாய் வளர்த்தலுமாம். நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். இந்த உண்மைகளை அறிந்தே நம் சமயத்தில் ஏழு வயதில் தீட்சை பெற வேண்டும் என்ற விதி சொல்லப்பட்டுள்ளது. ஏனெனலில் கால் கைகளை அடக்கி ஆளும் பக்குவம், மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக் கூடிய காலமும், அப்பருவகாலத்திலிருந்துதான் உதிக்கின்றன என்பது கருதியே. அவ்வயதில் தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும். படிப்படியாய்ச் சொல்லப்பட்ட தீட்சைகளைப் பெற்று அந்தந்த தீட்சைகளுக்குரிய கிரியைகளையும் சாதனங்களையும் அப்பியாசப்படுத்திவர, இறைவன் திருவடியடைதல் இலகுவாகும்.
தீட்சை பெற தகுதியுடையவர்கள்சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியுடையவர்கள். அதுமட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் தீட்சை பெற்று சைவசமயிகளாகலாம். மனிதர்கள் மாத்திரமன்றி புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன. உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஆசாரியனுடைய ஞானநிலை எவ்வளவோ அவ்வளவு ஆற்றலால் அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்கு மல மாசு நீங்கித் தூய்மை உண்டாகும். தீட்சை பெற விரும்புவோர் ஒழுக்க சீலராக இருப்பதோடு பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். உலகப் பற்றுக்களைக் குறைத்துத் தியானத்தில் ஈடுபடுகின்றவராக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
தீட்சை அளிக்கும் சிவாசாரியாரின் தகமைகள் சைவ மக்கள் சைவ சமய ஆசாரங்களை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய தகுதியை அளிப்பது தீட்சை ஆகும். இத் தீட்சையை அளிக்கின்ற சிவாசாரியார் சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆசார்யாபிஷேகம் எனும் நான்கையும் பெற்றவாராக இருக்க வேண்டும் என சிவாகமங்கள் கூறுகின்றன.
சமய தீட்சை சைவசமயி ஆகும் உரிமையைத் தருவது சமய தீட்சை எனப்படுகின்றது. சமய தீட்சை பெற்றவன் "சமயி" எனப் பெயர் பெறுகிறான். சமய தீட்சை பெறுவதால் சிவனின் சிறப்பு மூமந்திரமாகிய திருவைந்தெழுத்தை (சிவாய நம: எனும் பஞ்சாட்சரத்தை) ஸ்தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும். இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும்.
விஷேட தீட்சை சிவலிங்க பூசை செய்வதற்கான தகுதியளிப்பது விஷேட தீட்சை ஆகும். சமய தீட்சை பெற்று அதன் வழி நிற்கும் போது ஆணவ மலம் வலுவிலக்க, சிவனைச் சிவலிங்க வடிவிற் கண்டு வழிபடுதலாகிய கிரியைநெறியில் விருப்பு உண்டாக, முன்னர் சமய தீட்சை பெற்றுக்கொண்ட ஆசாரியரிடமோ அல்லது வேறொருவரிடமோ விஷேட தீட்சை பெறலாம். இதன் மூலம் சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை, புறப்பூசை செய்யும் முறைகளோடு யோக முறைகளைச் செய்யும் உரிமையையும் பெறலாம்.
நிர்வாண தீட்சை சமய தீட்சையும், விஷேட தீட்சையும் பெற்றவர்கள் இறுதியாகப் பெறும் தீட்சை நிர்வாண தீட்சை எனப்படும். இதன் மூலம் அத்துவாக்களை அடக்கும் கலையும், முப்பொருள் உண்மையை உணரும் தன்மையும், உயிரை ஞான நிலைக்கு உய்யச் செய்யும் நிலையும் ஞானாசிரியனிடமிருந்து கிடைக்கும். நிர்வாண தீட்சை சத்தியோ நிர்வாண தீட்சை, அசத்தியோ நிர்வாண தீட்சை என இரு வகைப்படும்.
சத்தியோ நிர்வாண தீட்சை முற்றாக பற்றற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனே முத்திப்பேறு கிடைக்கும் வகையில் செய்யப்படுவது ஆகும்.
அசத்தியோ நிர்வாண தீட்சை ஆன்மாக்கள் பிரார்த்த வினைப்பயனை அனுபவித்து முடிந்த பின் அவை முத்திப்பேறு அடையும் வகையில் செய்யப்படுவது ஆகும்.
ஆசாரிய அபிடேகம் நிர்வாண தீட்சை பெற்ற ஒருவர் குருப்பட்டம் தரிப்பதற்காகச் செய்யப்படும் கிரியை ஆசாரிய அபிடேகம் ஆகும். குருப்பட்டம் பெற்றோர் பிறருக்குத் தீட்சை கொடுக்கவும், பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுகின்றார். இவர் சிவாசாரியார் எனவம் அழைக்கப்படுவார்.
சிவாசாரியாருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்
திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருத்தல்.
உடல், உளக் குற்றமற்றவராக இருத்தல்.
கல்வியறிவும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல்.
சைவ நாற்பாதங்களில் பயிற்சியுடையோராயிருத்தல்.
சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவப் பாரம்பரிய நெறிகளையும் போதிக்கக் கூடியவராயிருத்தல்.
பதினாறு தொடக்கம் 70 வயதிற்குட்படோராயிருத்தல்.
தீட்சையின் வகைகள் தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும்.
நயன தீட்சை குரு தன்னை சிவாமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.
பரிச தீட்சை குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும். வாசக தீட்சை குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.
மானச தீட்சை குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.
சாத்திர தீட்சை குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும். யோக தீட்சை குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.
ஒளத்திரி தீட்சை பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment