இந்து சமயம் - 105 கோடி இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம். ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது. முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன. ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது. இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
சனாதன தர்மம்"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட construct களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
யோக தர்மம் இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாழ்வின் நான்கு இலக்குகள் இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளையும் அறம், வீடு என்ற கரைகளுக்கு இடையில் ஓடும் இன்பம், பொருள் என்ற நதி எனவும் சிலர் நோக்குவர்.
இறை தொண்டு / சமூக சேவைஇறை தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.
இந்து சமய நம்பிக்கைகள் இந்து சமய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு மாளாது என்றாலும், பொதுவான மற்றும் முக்கியமான ஒன்பது நம்பிக்கைகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
ஒன்பது நம்பிக்கைகள்
1.எங்கெங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே.
2.வேதங்களிலும் ஏனைய மறைகளிலும், ஆகமங்களிலும் இறை உண்மை உறைக்கப்பட்டிருக்கிறது.
3.அண்ட சராசரங்களும், அதிலுள்ள எல்லாமும் 'ஆக்கம் - வாழ்வு - இறப்பு' என்னும் முடிவில்லா சுழலில் தொடர்கின்றன. 4.ஒவ்வொருவரும் அவரது எண்ணம், சொல், செயல் மூலமாக தமது கர்மாவினை செதுக்கும் சிற்பியாக செயல்படுகின்றனர். 5.இறப்பிற்குபின் ஒவ்வொரு ஆத்மாவும் மறுபிறப்பு எடுத்து பிறவிச்சுழலில் தொடரும். ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.
6.உருவ வழிபாடு, சடங்குகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தங்கள் கண்ணுக்கு தெரியாத உலகங்களில் இருக்கும் இறைஅம்சங்களுடன் தொடர்பு கொள்வதாக நம்புகிறார்கள்.
7.சத்குரு ஒருவரின் வழிநடத்தும் துணையுடன் நல்லொழுக்கம், நன்நடத்தை, யாத்திரை, சுய-வினவல், தியானம் மற்றும் இறைவனுக்கு தன்னை முழுதும் அர்பணித்தல் போன்றவற்றால் எங்கும் நிறைந்த பிரம்மமான இறைவனை அறியலாம்.
8.எல்லா உயிர்களும் புனிதமானவை, அன்பு செலுத்தப்பட வேண்டியவை. எந்த உயிருக்கும் மனதாலோ, செயலாலோ தீங்கு விளைவிக்காமல் அஹிம்சைப் பாதையில் நடக்க வேண்டுமென்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
9.இந்து சமயத்தினைப் போலவே, மற்ற சமயங்களிலும் இறைவனை அடைவதற்கான உண்மையான வழிகளும் உண்டு.
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் இந்து சமயத்தில் வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினை எனப்படும்.
நுகர்வினை இது 'பிராரப்த கர்மம்' என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் நம் கருமம் அல்லது வினை. இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான். ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.
தொல் வினை ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது.எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் 'ஸஞ்சித கருமம்' என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்தஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான் தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில்.
வரும் வினை இவ்வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள்.
நியாயம் (இந்து தத்துவம்) நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது. இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதமர் அல்லது அட்சபாதர் என்பவர் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின. நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:
1. பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி
2. அனுமானம் - உய்த்துணர்வு
3. உபமானம் - ஒப்பீடு
4. சப்தம் - உரைச்சான்று என்பனவாகும்.
நியாய சூத்திரங்கள் என்பவை சட்தரிசனங்கள் எனப்படும் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாய (பகுத்தறிவு) தரிசனம் பற்றி "அட்சபாத கௌதமர்" என்பவரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு. இது கிமு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஏரணம் (தருக்கம்) (Logic) என்பது அறிவடிப்படையில் ஒன்று உண்மை, அது ஏற்கக்கூடியது (ஏலும்) என்று அறியவும்,ஒரு முடிவுக்கு வரவும்,உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய அறிவுத்துறை.ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது,பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட துறையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர். மேற்குலக மெய்யியல் வரலாற்றில் முற்காலத்தில் இலக்கணம், ஏரணம், உரைதிரம் (அணியியல்) (rhetoic) ஆகிய மூன்றும் முக்கியமானதாகக் கருதப்பெற்றன. இந்திய மெய்யியல் உலகில் ஏரணம், தருக்கம், நியாயம் முதலான கருத்தியல் துறைகள் இருந்தன. மேற்குலக மெய்யியலில் லாச்யிக் (ஏரணம்) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகிய லோகோசு (λόγος, logos) என்பதில் இருந்து பெற்றது. இதன் பொருள் “சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கை” "என்பதாகும். அரிசுட்டாட்டில் வளர்த்தெடுத்த சில்லாஜிஸ்ட்டிக் (syllogistic) அல்லது ஏரண முறையீடு என்னும் முறை 19 ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் முன்னணியில் இருந்தது. அதன் பின்னர் கணிதத்தின் அடித்தளங்கள் பற்றி கூர்ந்தெண்ணிய போது குறியீட்டு ஏரணம் அல்லது கணித ஏரணம் என்னும் துறை தோன்றியது. 1879 இல் ஃவிரெகெ (Frege) எழுதிய எழுத்து என்று பொருள் படும் பெக்ரிஃவ்ஷ்ரிஃவ்ட் (Begriffsschrift) என்னும் தலைப்பில் குறியீடுகள் இட்டுத் துல்லியமாய் ஏரணக் கொள்கைகள் பற்றி விளக்கும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதுவே தற்கால ஏரணத்தின் தொடக்கம் எனலாம். இந்நூலை குறியீடு மொழியில், எண்கணித முறையை ஒற்றிய, தூய எண்ணங்கள் ("a formula language, modelled on that of arithmetic, of pure thought.") என்னும் துணைத்தலைப்புடன் வெளியிட்டார். 1903 இல் ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஃகெட் மற்றும் பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவரும் சேர்ந்து பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica)[4] (கணித கருதுகோள்கள்) என்னும் புகழ்பெற்ற நூலை எழுதி கணிதத்தின் அடித்தள உண்மைகளை குறியீட்டு ஏரண முறைகளின் படி முதற்கோள்கள் (axioms) மற்றும் முடிவுகொள் விதிகளால் அடைய முற்பட்டு பல உண்மைகளை நிறுவினார்கள்.1931 இல் கியோடல் (Gödel) என்பார் முடிவுடைய எண்ணிக்கையில் முதற்கோள்கள் இருந்தால் குழப்பம் தராத (ஐயத்திற்கு இடம்தரா) உறுதியான முடிவுகளை ஏரண முறைப்படி அடைய இயலாது என்று நிறுவினார். இதன் பயனாய் இவ்வகையான வழிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
வேத தத்துவ தரிசனங்கள் வேத தத்துவ தரிசனங்கள் எனப்படுபவை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும். விடயங்களை நோக்கும் வழிகள் எனப் பொருள்படும் தரிசனங்கள் ஆறு வகைகளாக உள்ளன. இவற்றை, உண்மைப் பொருள் பற்றிய ஆறு விதமான விளக்கங்கள் எனக் கூறலாம். இவை ஒவ்வொன்றும், பல்வேறு காலப்பகுதிகளிலும் எழுதப்பட்ட வேதப் பகுதிகளில் சிதறிக்கிடக்கும் கருத்துக்களை, தங்களுக்கேயுரிய முறைகளில் ஒழுங்கு படுத்தியும், ஒருமுகப்படுத்தியும் தருகின்றன. இந்த ஒவ்வொரு பிரிவையும் நிறுவியவர்களாக அறியப்படும் ரிஷிகள், இவற்றுக்குரிய சூத்திர நூல்களையும் இயற்றியுள்ளார்கள். ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:
1. நியாயம் - கௌதமர்
2. வைசேடிகம் - கணாதர்
3. சாங்கியம் - கபிலர்
4. யோகம் - பதஞ்சலி
5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி
6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - பாதராயனர் இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
1. நியாயம் - வைசேடிகம்
2. சாங்கியம் - யோகம்
3. மீமாம்சை - வேதாந்தம்
No comments:
Post a Comment