Sunday, March 20, 2011

விரும்பும் வண்ணமாக காட்சி தரும் கடவுள்..!


ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.
அதைக் கேட்ட அம்மனிதன், “நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?” என்றான்.
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.
இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.
அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், “ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி”, என்று தெரிவித்தான்.
இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர்

No comments:

Post a Comment