திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது.
இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள்.
'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.
தாரை வார்த்தல்:பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.
தாலி கட்டுதல் :தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள். தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.
மெட்டி அணிவித்தல் :திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.
அம்மி மிதித்தல் :உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'
அருந்ததி காட்டல் :அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.
இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.'அன்பும் அறனும் உடைத்தாயின்இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்.
No comments:
Post a Comment